இரா. நடராசன் புனைகதைகளில் இலக்கிய உத்திகள்
ம. கண்ணன்
முனைவர்
பட்ட ஆய்வாளர்
தமிழியல்துறை
பாரதிதாசன்
பல்கலைக்கழகம்
திருச்சிராப்பள்ளி
- 620024
மின்னஞ்சல்
tamilkannan02@gmail.com
நவீன இலக்கியப் படைப்பாக்கங்களில் உத்திமுறைகளின்
இடம் சிறப்பபானது. படைப்பாளர்கள் திட்டமிட்டோ, திட்டமிடாமலோ பல உத்திகளைக் கையாள்கின்றனர்.
அவை படைப்பின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன; கதையோட்டத்தைச் சுவைமிக்கதாக
மாற்றுகின்றன. “ஒரு கலைப்படைப்பைச் சரியாகப்
புரிந்து கொள்ள உதவுவது அக்கலைப் படைப்பில் இணைந்து அமைந்துள்ள உத்திமுறைகளாகும்”(தமிழ்ச்
சிறுகதை நேற்றும் இன்றும், தொகுதி 3, ப.20) என்று திருமலை உத்திமுறைகளின் உதவி பற்றிக்
கூறுகிறார். உத்திமுறைகள் படைப்பாளரின் எண்ணத்தையும் கருத்தையும் நன்கறிவதுடன் அக்கலைப்படைப்பை
மதிப்பிடுவதற்கும் களனாக அமைகின்றன.
இரா. நடராசன் 1980களில் தம் எழுத்துப் பயணத்தைத்
தொடங்கி தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அறிவியல் புனைகதையாளர். ஆரம்பக்கால கட்டத்தில்
சமுதாயத்தின் அவலங்களையும் தாம் கண்டுணர்ந்தவற்றையும் கதைகளில் சமூகச் சிக்கல்கள்களாகக்
கொண்டு எழுதினார். பின்னர் மாணவர்களுக்கு அறிவியல் புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு
சிறுவர்களுக்கான அறிவியல் புனைவுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். இரா. நடராசன் தாம் உணர்ந்த
கருத்தினை வாசிப்பாளர்களின் நெஞ்சைக் கவர்ந்து உணர்பூர்வமாக அனுபவிக்குமாறு கதையோட்டத்தை
அமைத்து எழுதுகிறார். இலக்கியநயமிக்க உத்திகளைக் கையாண்டு, கதையின் வளர்ச்சித் திறம்பட
செயல்பட வைக்கிறார். தன்னுடைய படைப்புகளில் உத்திகளைக் கையாள்வதை “என் படைப்புகளின் யுக்திகளை நான் திட்டமிட்டு உருவாக்கியது
உண்மைதான். ஆனால் அதற்கான தேவையை என்மீது திணித்தது என் வாசகர்கள்தான்”
(இனிய உதயம் இதழ் - நேர்காணல், ஏப்ரல் 2009) என்று விளக்கமளிக்கிறார்.
கதையின் நயத்திற்கேற்ப உத்திகளைக் கையாண்டுள்ளார் என்பது புலனாகிறது.
நினைவோட்ட
உத்தி
இவ்வுத்திப் பாத்திரங்களின் நினைவோட்டம் மட்டுமில்லாது
அவர்களின் அடிமனத்தின் எண்ணங்களை வெளிக்காட்டுவதாகவும் அமைகின்றது. தாங்கள் கடந்துவந்த
பாதையை நினைத்து மகிழ்வதை, புலம்புவதை நினைவோட்ட உத்தியில் பயன்படுத்துகின்றனர். கதைகளைப்
பண்படுத்துவதால், கதையோட்டம் சிறப்புற அமைவதற்கு உதவுகிறது. நனவோடை உத்தியின் பயன்பாட்டைப் பற்றி,
“குறிப்பிட்ட ஒரு உணர்வு வயப்பட்டு நிற்கும் நிலையுள், வாழ்க்கை முழுவதையும் அடக்கிவிடுவது
இவ்வுத்தியின் பண்பாகும்” (தமிழில் சிறுகதை தோற்றமும் வளர்ச்சியும், ப.37) என்று நனவோடை
பற்றிக் கா. சிவத்தம்பி குறிப்பிடுகிறார். அதனை ஒத்தது நினைவோட்டம்; ஆனால், சிக்கலான
உளவியல் கூறுகள் அற்றது.
’களவாணி’ என்னும் சிறுகதையில் திருடன் ஒருவன்
தன் வாழ்க்கையைப் பற்றிக் கடலிடம் சொல்லிப் புலம்புகிறான். திருடனாக மாறியதையும் தண்டனைகள்
கிடைக்கப்பட்டதையும் தாயின் செயலையும் நினைத்து மனம் வெதும்புகிறான். அவன் தன் அடிமனத்தின்
எண்ணங்களை எல்லாம் கூறிவிட்டுக் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான்.
களவாணியின்
மனம் ஒரு ஓயாத கடல் மாதிரிதான் கடலே… அலைமோதிக் கொண்டே இருக்கும் வாழ்க்கை. கரைக்குப்
போய்ப்போய் திரும்பும் உனது அலைபோல வெளியே போய் மீண்டும் சிறைக்கே திரும்புவது அது…
ஆனால் சீற்றம் பெற்றால் ஊரையே விழுங்குவதில்லையா நீ… அப்படித்தான் பொங்கியெழத் தயாரானேன்
நான்… (இரா.
நடராசன் சிறுகதைகள், ப.43)
என்று
திருடன் தான் மீண்டும் மீண்டும் சிறைக்குச் சென்றுவந்ததால் அதற்குக் காரணமான தனது காவல்துறையைச்
சார்ந்த மாமாவைத் தண்டிக்கும் பொருட்டு அவரது வீட்டிற்குத் தீயை வைத்துப் பழிவாங்குகிறான்.
அதனால் தான் மிகவும் துன்புறுத்தப்படும் நிலையிலிருந்து விடுபடவும் இனிமேல் இச்சமுதாயத்தில்
வாழமுடியாது எனவும் கருதிக் கடலுக்குள் தஞ்சம் புகுகிறான்.
பணியிடை மாற்றத்தால் வீடுமாறும் ஓர் அரசு அதிகாரியின்
மகன், அங்கு வேலைசெய்ய வந்த கூலியாள் ஒருவரின் செயலை நினைத்துப் பார்ப்பதை, ’கேங் கூலி’
என்னும் சிறுகதை காட்டுகிறது. அவரது தோற்றம் பற்றி,
“திடீரென வெளிச்சோடிப் போன மரம்போல காணப்பட்டான்.
உழைப்பில் முறுக்கேறிய புஜங்களுடன் அவன் கிழடு தட்டிப்போயிருந்தான். சாம்பல் நிறத்தில்
தாடி இருந்தது கோரைகோரையாக, முகத்தை முதிர்ச்சி அப்பியருந்தது”
(இரா. நடராசன் சிறுகதைகள், ப.167)
என்னும்
கூற்றால் அறியமுடிகின்றது. கூலியாட்களை நடுத்தர மக்கள் எவ்வாறு வேலை வாங்குகிறார்கள்
என்பதை இக்கதை உரைக்கிறது. இது இரா. நடராசன் சிறுவயதில் நடைபெற்ற ஒரு நிகழ்வாகும்.
மேலும் ’அதுஅவன்அவர்கள்’ என்னும் சிறுகதையும் நினைவோட்ட
உத்தியில் அமைந்துள்ளது. தங்களின் குடும்பத்தில் தொலைக்காட்சியின் வரவால் இரண்டு வருடங்களுக்கு
முன்பு இருந்ததையும் தற்பொழுது நடப்பவைகளையும் கொண்டு ஒப்பிட்டுப் பார்ப்பவரின் நினைவைக்
குறிப்பிடுகிறது. ’சென்ற ஞாயிற்றுக்கிழமை’ என்னும் சிறுகதையில் மனநிலை பாதிக்கபட்டவரின்
இறப்பைப் பற்றி அவனது நண்பன் நினைத்துப் பார்ப்பதையும், ’மிச்சமிருப்பவன்’ என்னும்
சிறுகதையில் சாதிவெறியால் தன்னுடைய குடும்பத்தினரையும் ஊரையையும் தீக்கு இரையானதையும்
நினைத்துப் பார்ப்பதையும் இரா. நடராசனின் புனைவுகளில் காணமுடிகின்றது.
“இத்தகைய உத்தியைக் கையாள்வது சிலருக்கு புதுமையாகத்
தோன்றலாம். ஆயினும் கடல்நுரை போன்று பயனற்றது ; மயக்கம் தருவது. வேடிக்கை என்னவெனில்
சமுதாய உணர்வு, பொறுப்புணர்வற்றவர்கள் இத்தகைய எழுத்தைப் படித்துப் புரியாதபோது அதனுள்
ஏதோ மர்மம் இருப்பதாகப் போற்றவும் செய்கின்றன. ’உள்ளே காளி ஆடுது பாரீர்’ என இருட்டு
வீட்டில் கறுப்புப் பூனையைக் காட்டுபவர்போல மற்றவர்களையும் ஏமாற்ற முயல்கின்றனர்”
(கலையும் சமுதாயமும், ப.91) என்று செ. கணேசலிங்கன் கூறுகிறார். இது கா. சிவத்தம்பின்
கருத்திற்கு முரணானது. ஆனால் நனவோடைச் சாயல் கொண்ட நினைவோட்டம் புரிந்து கொள்ளத்தக்கது;
பயனுடையது. இதனையே இரா. நடராசன் கையாள்கிறார்.
உரையாடல் உத்தி
உரையாடல்கள் அமைந்து கதைமாந்தர்கள் வாசிப்பாளன்
முன் பேசிக்கொள்வது போன்று எண்ணத்தைத் தரும் உத்தி. இருவருக்குள் இடையிலான உரையாடலின் மூலம் அக்கதையின்
மாந்தர் பண்பு, நடைபெறும் சூழல், காலம், இடம் போன்றவையும் அறியமுடிகிறது. கதைமாந்தரின்
பண்பினை விளக்குவதாக ‘நாத்திகன் மனைவி’ என்னும்
சிறுகதையின் உரையாடல் அமைந்துள்ளது. நாத்திகக் கொள்கையாளனான கணவனுக்கும் அவன் மனைவிக்கும்
இடையிலான உரையாடல் அவர்களின் பண்பினை உரைக்கின்றது.
“தாலிபாக்கியம்
தானே நிலைக்காதுன்னாங்க… நீங்கதான் தாலியே கட்டுலியே… கட்டியிருந்தா தெரிஞ்சிருக்கும்
உண்மையா… பித்தலாட்டமான்னு”
”பார்க்கலாமா…
தாலிகட்டிப் பார்த்துருவோமா… அப்புறமும் நான் உயிரோட… இருந்தா கோவில மிதிக்கப்படாது…
சாமி சடங்கு எல்லாத்தையும் முச்சூடா விட்டுறணும்… ஒத்துக்கிறியா நீ…”
“நீ மட்டும்
கோவில்ல வெச்சு எனக்கு சம்பிரதாயமா தாலி கட்டுய்யா.. அப்புறம் சாமி பக்கம் தலைவச்சுக்கூட
படுக்கலிய்யா… நானு…” (இரா. நடராசன்
சிறுகதைகள், ப.73)
என்னும்
கூற்றால் தாலிகட்டுதல் தொடர்பான இருவரின் நிலைப்பாடு வெளிப்படுகிறது. மகனின் எதிர்காலத்தைக்
கருத்தில் கொண்டு கணவன் - தாலி கட்டினால் கோவிலுக்குச் செல்வதில்லையென்று அறைகூவல்
விடுகிறாள்.
‘ஆயிஷா’
சிறுகதையில் ஆயிஷாவிற்கும் அவளின் அறிவியல் ஆசிரியைக்கும் இடையே நடக்கும் உரையாடல்
நமது கல்விமுறையால் ஏற்பட்ட விபரீதத்தைச் சுட்டுகிறது; கேள்வி கேட்கும் ஆயி‘ஷாவின்
அறிவுத்தேடலைப் பூர்த்திசெய்யாது அவளுக்குத் தண்டனை கொடுக்கும் கல்விமுறையின் செயலைக் காட்டுகிறது. வரலாற்று ஆசிரியையிடம்
கேள்வி கேட்கும் ஆயிஷாவிற்குத் தண்டனைகள் கிடைத்ததால் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு
முயல்கிறாள்.
“இன்னிக்கு… எக்ஸ்பரிமண்ட் சக்சஸ்
மிஸ்”
“என்ன … என்ன எக்ஸ்பரிமண்ட்”
“இந்தாங்க ஸ்கேல்… என்னை அடியுங்க
பாப்போம்”
“ஏன்… ஆயிஷா… என்ன சொல்ற நீ…”
“மருந்து மிஸ்… மரத்துப்போற மருந்து….
இனிமே யாரு அடிச்சாலும் எனக்கு
வலிக்காது மிஸ்… எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கட்டும்…” (இரா. நடராசன் சிறுகதைகள்,
ப.247)
என்னும்
உரையாடல் மூலம் அறிவியல் ஆசிரியையிடம் தான் இத்தகைய துன்பநிலையிலிருந்து விடுபடுவதாகக்
கூறுகின்றாள் ஆயிஷா. தன்னுடைய உடல் மரத்துபோகச் செய்வதற்கு நைட்ரஸ் எத்தனால் கரைசலை
எடுத்து ஊசியால் தனக்குச் செலுத்திக் கொண்டதால் இறந்துபோகிறாள். பள்ளிகளில் நடைபெறும்
இன்னல்களிலிருந்து தப்பிப்பதற்கு மாணவர்கள் மேற்கொள்ளும் தப்பித்தல் முயற்சியை இவ்வுரையாடல்
உரைக்கின்றது. ஆயிஷாவைப் போன்று பல ஆயிஷா சமுதாயத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் மேற்கொண்ட தற்கொலை முயற்சிகளை இதனால் உணரலாம்.
கலைத்துப்போடல் உத்தி
கதையின் வளர்ச்சியை முறையாக வரிசைப்படுத்தி
அமைக்காது அதன் பகுதிகளை மாற்றியமைத்து வாசிப்பாளரின் எதிர்பார்ப்பைத் தூண்டும்வகையில்
அமைவது கலைத்துபோடல் உத்தி. இந்த உத்தியை இரா.நடராசன் ‘பாலித்தீன் பைகள்’
என்னும் புதினத்தில் பயன்படுத்துகிறார். மூன்று தலைமுறைகளைப்
பற்றி உரைக்கும் கதையில் கதைமாந்தகள் அவர்களின் கதையைப் படிக்கின்றனர். மூன்று பகுதிகளாகப்
பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் பல அத்தியாயங்களைக் கொண்டு அமைந்துள்ளது. தொடக்கப்பகுதியில்
6, 1, 2, 7, 3, 4, 5 என்று மாறிமாறி அமைந்துள்ளது.
கதைக்குள் கதை உத்தி
இரா. நடராசன் தம் புனைவுகளில் ‘கதைக்குள் கதை’
என்னும் உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வுத்தி படிப்போரை அக்கதையினுள் மூழ்கிடச்
செய்வதற்குப் பெரிதும் பயன்பட்டுள்ளது. இவருடைய ‘பாலித்தீன் பைகள்’
எனும் புதினத்திலும் ‘ஒரு தோழியின் கதை’,
‘நவீன பஞ்சதந்திர கதைகள்’, ‘விஞ்ஞான
விக்கிரமாதித்தன் கதைகள்’, எனும்
கதைகளிலும் இவ்வுத்தியைக் கையாண்டுள்ளார்.
பயன்படுத்தாத பழையஅரண்மனையொன்றிற்குச் செல்லும்
சிறுவர்களுக்குப் பாட்டியொருத்தி அந்த அரண்மனையைப் பற்றிய கதையைச் சொல்வதை
‘ஒரு தோழியின் கதை’
காட்டுகிறது. தண்டனை பெற்ற இளவரசி தூக்கமில்லாது இருக்கவே, அவளைத்
தூங்க வைக்கப் பலரும் கதைகளை உரைக்க, அவளின் தோழியும் கதையொன்றினை உரைக்கிறாள். இவ்வாறாகக்
கதைக்குள் கதை அமைந்து புனைவை ஆர்வமிக்கதாக்குகிறது.
பறவைகளும் விலங்குகளும் உரையாடுவதைப் போன்று
‘நவீன பஞ்சதந்திர கதைகள்’ அமைந்துள்ளது.
மக்கள், மாக்களைக் கொண்டு கதை உரைப்பதைப் போன்று இக்கதையில் மாக்கள், மக்கள் பற்றிய
கதையை உரைத்து நீதிக் கருத்தையும் வலியுறுத்துகிறது. காக்கைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்கும்போது,
நரியிடம் காக்கை வடையைப் பறிகொடுத்த கதையை மக்கள் உரைப்பர். ஆனால், இங்கு காக்கை அதற்குப்
புதியதோர் வகையான விளக்கத்தைக் கதையாகச் சொல்கிறது. வடை பறித்த நரியைக் காக்கைகள் ஒன்றிணைந்து
கொத்திக்கொத்தி விரட்டிவிடுகின்றன.
அப்புறம்
எல்லோரும் அந்த வடையை பங்குபோட்டு சாப்பிட்டோம். இதுல இருந்து நீ ஒரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கணும்.
அதாவது நாம் உழைத்து சம்பாதித்த உணவை அடுத்தவர் பறித்தால் ஒற்றுமையுடன் எதிர்த்துப்
போராடணும். புரிஞ்சுதா…? (ப.10)
என்பதால்
காக்கைக்கு உரைத்ததாக இருந்தாலும் இக்கதைகளின் வழியே குழந்தைகளுக்கு நீதிக் கருத்தினைப்
புகட்ட முயல்கிறார் ஆசிரியர்.
பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து அரசாட்சி புரிந்த
மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இடையே நடைபெறும் பேச்சினை ‘விஞ்ஞான
விக்கிரமாதித்தன் கதைகள்’ இயம்புகிறது.
வேதாளம் கதை ஒன்றினைக் கூறி அதற்கான புதிரை உரைக்கிறது. அதற்கு விக்கிரமாதித்தன் பதில்
கூறாவிடில் தலைவெடித்து இறப்பாயென எச்சரிக்கிறது. வேதாளம் கதை கூறுவதாக, ‘சர்க்கரை
குண்டன் கதை’, ‘கைகாலன் கதை’,
‘நாய்க்கடி நந்திவர்மன் கதை’ போன்று
எட்டுகதைகளை உரைக்கிறது இந்நூல். வேதாளம் கதை உரைப்பதை,
மன்னா!
பற்பல நூற்றாண்டுகளாக இந்தப் பணியை தளராமல் செய்யும் உன் நேர்மையை நான் பாராட்டுகிறேன்.
இத்தகைய உன் வேலை தொடரும் வரை உனக்கு மரணமில்லை… இனிமேல் உன்னை மனிதர்கள் காணமுடியாது…
என்னையும் காண இயலாது… இத்தனை நூற்றாண்டுகளில் ஏதேதோ நடந்துவிட்டது. நீ தூக்கிச்செல்லும்
இந்த உடலுக்குரியவனின் பெயர் சர்க்கரை குண்டன். அவனது கதையை இப்போது கேட்பாயாக (விஞ்ஞான
விக்கிரமாதித்தன் கதைகள், ப.7)
என்னும்
கூற்றால் அறியமுடிகின்றது. ‘கதைக்குள் கதை’
எனும் உத்தி நயமுற அமைந்த ‘விஞ்ஞான விக்கிரிமாதித்தன் கதைகள்’
எனும் இந்நூல் 2014ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான ‘பால சாகித்திய
அகாதெமி விருது’ பெற்றது. மருத்துவம் சார்ந்த
பல நோய்களையும் அவற்றிற்கான மருந்துகளையும், அம்மருந்தினைக் கண்டறிந்த விஞ்ஞானிகளையும்,
அதற்கான சூழல்களையும் பற்றி உரைப்பதாக அமைந்துள்ளது. மருந்துவம் சார்ந்த தகவல்களை அளிப்பதால்
ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. “ரஃப் நோட்டு” என்னும்
கதையாடலும் கதைக்குள் கதை என்னும் உத்தியுள் அடங்கும்.
கடிதமுறை
உத்தி
கடிதம் எழுதுவதென்பது ஒரு கலை. பண்டைய காலந்தொட்டு
இம்முறை இருந்து வந்துள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தகவலை அனுப்பப்
புறாவைப் பயன்படுத்தினர். காதிதம் கண்டறிந்த
பின்னர், இத்தகவல் பரிமாற்றம் எளிதானது. கதையமைப்பில் ஒருவர் மற்றவருக்குத் தம் எண்ணங்களைக் கடிதமாக எழுதுவதைக் குறிப்பிடுவது போல
அமைப்பது கடிதமுறை உத்தி ஆகும். சாரணர் இயக்கத்தில் இருக்கும் முகிலன் என்பவன் தன்னுடைய
சகோதரிக்கு ‘நாகா’ என்னும் நண்பர் பற்றி கடிதம் எழுதுவதை ‘நாகா’ என்னும் புதினம் காட்டுகிறது.
“அன்புள்ள
எஸ்த்தர் அக்காவுக்கு, நீங்கள் என் ஆருயிர் நண்பன் நாகாவுக்கு எழுதிய கடிதம் நேற்று
கிடைத்தது. மூன்று மாதங்களுக்க முன் எழுதி இருக்கிறீர்கள். அது ஹவானாவிலிருந்து கப்பலில்
பிரயாணம் செய்து நேற்று வந்து சேர்ந்துவிட்டது” (நாகா,
ப.3)
என்று
கடிதம் தொடங்கி இறுதியில் ‘உங்கள் வரவை எதிர்பார்த்து/ நாகாவின் காலடியில் காத்திருக்கும்/
முகிலன்’ (ப.160) என்று கடிதம் முடிகிறது.
‘இரத்தத்தின் வண்ணத்தில்’ என்னும் சிறுகதையில்
பாலியல் தொழிலாளி ஒருத்தி தன் அம்மாவிற்குக் கடைசியாகக் கடிதம் எழுதுகிறாள். தன் வாழ்க்கையில்
ஏற்பட்ட துன்பச்சூழலைப் பற்றியும் பாலியல் வன்கொடுமையின்போது கொலைசெய்ததையும் கடிதத்தில்
குறிப்பிட்டு தன்னைக் காணவராத தாய்க்கு ஏக்கத்தோடு தூக்குத்தண்டனைக்கு முன் கடிதம்
எழுதுகிறாள்.
“அன்பும், தாய்ப்பாசமும், ஏன் குறைந்தபட்சம் இரக்கங்கூட
இல்லாது போன உனக்கு, மூச்சுத் திணறக்கூடிய மனவலியின் அலைக்காற்றிலிருந்து அம்சா எழுதுகிறேன்.” (இரா. நடராசன்
சிறுகதைகள், ப.226)
என்று
மனத்தில் ஏற்பட்ட வலியோடு கடிதம் எழுதத் தொடங்குகிறாள். இக்கடிதமுறை உத்தி எழுதுபவரின்
எண்ணத்தினை முழுமையும் வெளிப்படுத்துகிறது என்பதைப் புலப்படுத்துகிறது.
தலைப்புப்
பொருத்தம்
“சிறுகதையின் தலைப்பு பெரும்பாலும் கதாசிரியரின்
சிந்தனையைச் சுட்டிக்காட்டுவதாக அமைகிறது.”(கதையியல்,
ப.49) என்று க. பூரணச்சந்திரன்
உரைக்கிறார். இரா. நடராசன் புனைவுகளில் கதைமாந்தர் பெயர்களைப் பற்றி பெயர் இல்லாதவர்,
விஞ்ஞான கிறுக்கன், கடைசிச் சங்கு, நாத்திகன் மனைவி, கடைசீ நடராசன், முருகேசு, சோமாசி,
சங்கிலி, களவாணி, சுசீ முதல் சுசீ வரை, ஆயிஷா, போன்ற சிறுகதைகளுக்கும், நாகா, மலர்
அல்ஜீப்ரா, பூமா, போன்ற புதினங்களுக்கும் தலைப்புகளாகத் தந்துள்ளார்.
கடைநிலை மக்களின் வாழ்க்கையை உரைக்கும் கதைகளின்
மையக்கருத்தைக் கொண்டு பால்திரிபு, மேய்ப்பவர்கள் பற்றிய இறுதி தீர்ப்பு, திருடப்பட்டவர்கள், மிச்சமிருப்பவன், உடலைத் தொலைத்தவன்,
கிளறல், பிலிசிங்கு என்னும் சிக்குலிங்கத்தின் வாக்குமூலம், இரத்தத்தின் வண்ணத்தில்,
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பக்திக்குரிய இடம் கோவில்மட்டுமல்ல, மதி என்னும்
மனிதன் மரணம் குறித்து போன்ற சிறுகதைகளுக்கும், பாலித்தீன் பைகள், ரோஸ் போன்ற புதினங்களும்
தலைப்பிடப்பட்டுள்ளன.
முடிவுரை
அறிவியலின் முற்போக்கான வரலாறு, அறிவியல் வளர்ச்சி, அறிவியல் கூறுகள்,
அறிவியலறிஞர்களின் போராட்ட உணர்வு, முதலியவற்றை - தொகுத்துச் சொல்வதாயின் அறிவியல்
மனப்பாங்கைப் - போற்றும் நோக்கில் - கல்வி மேம்பாடு, கல்வியினூடாகக் கடைநிலை மக்கள்
மேம்பாடு முதலியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு - ஆனால் பிரச்சாரமாக அன்றிக் கலைநயத்தோடு
- தம் புனைகதைகளைப் படைத்துவரும் ஆயிஷா நடராசன் அவர்களுக்குக் கருத்தைக் கலையாக்கப்
பல்வேறு நிலைகளில் கைகொடுப்பவை அவர் கையாளும் உத்திகள்தாம்.
துணைமை நூல்கள்
1.
கணேசலிங்கன், செ., 1995, கலையும் சமுதாயமும், பாரி நிலையம், பிராட்வே, சென்னை –
108
2.
சிவத்தம்பி, கா., 1980, தமிழில் சிறுகதையின்
தோற்றமும் வளர்ச்சியும், தமிழ் புத்தகாலயம்,
திருவல்லக்கேணி, சென்னை - 5
3.
திருமலை, ம., 1997, தமிழ்ச் சிறுகதை நேற்றும்
இன்றும் – தொகுதி 3, ஐந்திணைப் பதிப்பகம்,
திருவல்லிக்கேணி, சென்னை – 5
4.
நடராசன், இரா., 2011, பாலித்தீன் பைகள், பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை
– 18.
5
நடராசன், இரா., 2014, நாகா, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை – 18.
6.
நடராசன், இரா., 2010, நவீன பஞ்ச தந்திர கதைகள்,விகடன் பிரசுரம், அண்ணாசாலை, சென்னை
– 2
7. நடராசன், இரா., 2011, இரா. நடராசனின் சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை,
சென்னை – 18.
8.
நடராசன், 2012, விஞ்ஞான விக்கிரமாதித்தன்
கதைகள், பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை – 18.
9.
நடராசன், இரா., 2013, ஒரு தோழியின் கதை, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை
– 18.
10.
பூரணச்சந்திரன்,க., 2012, கதையியல், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி.