Monday, 19 October 2015

முத்தொள்ளாயிர  உவமை நிலைக்களன்கள்

                இந்திய அரசின் செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாற்பத்தொரு செம்மொழி இலக்கண இலக்கியங்களில் முத்தொள்ளாயிரமும் ஒன்று; சங்க இலக்கியத்திற்கு இணையாக வைத்துப் போற்றப்படும் தகுதி வாய்ந்தது. இந்நூலில் உவமைகள் குன்றிலிட்ட விளக்காய் ஒளிவீசுகின்றன. அவற்றில் நிலைக்களன்களான சிறப்பு, நலன், காதல், வலிமை என்னும் நான்கு நிலைகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக உள்ளது.         
முத்தொள்ளாயிரம்
                தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்தது முத்தொள்ளாயிரம். இந்நூலிலுள்ள பாடலைப் பாடிய புலவர் யாரென்று அறியமுடியவில்லை; சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அவர்களது நாட்டின் வளத்தையும் போர்த்திறத்தையும் உரைப்பதாக அமைந்துள்ளதுதொள்ளாயிரம் பாடல்கள் வீதம் மூவேந்தர்களுக்கு அமைந்து முத்தொள்ளாயிரம் உருவானது என்பர். இருப்பினும் மூவேந்தர்களுக்கும் முன்னூறு பாடல் வீதம் அமைந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பப்படுகின்றது. ஏனெனில், தொள்ளாயிரம் என்னும் இலக்கிய வகை தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகையுள் ஒன்றாக அமைந்துள்ளது. மேலும் வச்சத் தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் என்பவை போன்று இதுவும் மூன்று வேந்தர்களைப் பற்றிக் கூறும் தொள்ளாயிரம் பாடல்கள் என்று கூறுகின்றனர் அறிஞர் பெருமக்கள்.
                முத்தொள்ளாயிரத்தில் நமக்கு கிடைத்தவை நூற்றொன்பது பாடல்களேயாகும். இவற்றில் கடவுள் வாழ்த்து ஒன்று, சேரமன்னர்களுக்கு இருபத்திரண்டு, சோழ மன்னர்களுக்கு இருபத்தொன்பது, பாண்டிய மன்னர்களுக்கு ஐம்பத்தாறு, சிதைந்த நிலையில் ஒன்று என்று நூற்றொன்பது பாடல்கள் உள்ளன.
                முதன்முதலில் இரா. இராகவையங்கார் முத்தொள்ளாயிரப் பாடல்களை 1905ஆம் ஆண்டில் செந்தமிழ் இதழின் வழியே வெளியிட்டார். பின்னர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பாக 1938ஆம் ஆண்டு புறத்திரட்டாக வெளியிட்டார். இவற்றிற்கு எளியமுறையில் டி.கே. சிதம்பரநாதர் உரையெழுதியுள்ளார்.
                “மூவேந்தர்களின் உலாவினைக் கண்டு அவர்களின் மேல் காதல் கொண்ட பெண்களின் மனநிலையினை விளக்குவனவாகக் கைக்கிளைப் பாக்கள் அமைந்துள்ளன (முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் .i) என்று கதிர்முருகு உரைக்கிறார். இது குறிப்பிட்ட எந்த மன்னனையும் குறிப்பிடாமல் பொதுப்பெயர் கொண்டு மன்னர்களைக் குறிப்பிடுகின்றது. இதில் அகப்பாடல்களும் புறப்பாடல்களும் ஒருங்கே அமைந்துள்ளது.
உவமை
                இலக்கியத்தின் வளமைக்குப் பலவகைக் கூறுகள் இருப்பினும் உவமையின் பங்களிப்பு இன்றியமையாதது. இனிமைக் கூட்டுவதுடன் செழிப்புற அமைவதற்குத் துணையாக அமைவது உவமையாகும். உவமையைக் குறிப்பிடும் போல, அன்ன போன்ற முப்பத்தாறு சொற்களைக் கொண்டு உவமையைக் கண்டறிய முடியும். இரண்டு பொருளினை ஒப்புமைப்படுத்தும் நிலையில் உவமை பயன்படுகிறது. இதனைஒரு பொருளின் அழகைக் கண்டு மற்றொரு பொருளின் அழகை நினைத்து இதனை அதனோடு ஒப்பிடுத்தல் உவமை (இலக்கியத்திறன், .194) என்று மு. வரதராசனார் உரைக்கின்றார். இக்கூற்றிற்கு வலுசேர்க்கும் வகையில்ஒன்றோடு மற்றொன்றை இயைபுபடுத்திப் பார்க்கும் இயற்கையான தூண்டுதலே உவமை பிறக்க காரணம் எனலாம் (புதிய உரைநடை, .78) என்று மா. இராமலிங்கம் கூற்றின் வழியே அறியமுடிகின்றது.
                இத்தகைய சிறப்பினைக் கொண்ட உவமை தோற்றம் காணும் இடங்களை அறிதல் அவசியமாகிறது. உவமை தோற்றம் காணும் இடத்தினை “நிலைக்களன்” என்று தொல்காப்பியர் உரைப்பார். இதனை,
                சிறப்பே நலனே காதல் வலியொடு
                அந்நாற் பண்பும் நிலைக்கள மென்ப                (தொல். பொரு. உவ.275)

என்னும் நூற்பாவின் மூலம் அறியமுடிகிறது. இந்நூற்பாவிற்கு உரைகாணும் இளம்பூரணர், “மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப்பட்டனவெனும் சிறப்பாதல், நலனாதல், காதலாதல், வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு என்று உரைக்கின்றார். சிறப்பு, நலன், காதல், வலி என்னும் நான்கினோடு இழிந்ததன் பொருட்டும் நிலைக்களன் அமைந்து உவமையைச் சிறப்பிக்கும்.
சிறப்பு
                ஒருவரைப் போற்றும் விதத்தில் அமைந்திருப்பவையே சிறப்பு.,  “சிறப்பென்பது, உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறும் சிறப்பு.” (தொல். பொரு. ப.378) என்று சிறப்பிற்கு விளக்கமாக இளம்பூரணர் உரை கூறுகிறார். மன்னனைப் போற்றும் விதமாக அமைந்துள்ளவை முத்தொள்ளாயிரப் பாடல்கள். மன்னன் மீது காதல்கொண்ட பெண்ணொருத்தி அவனைப் புகழ்ந்து சிறப்பிக்கும் பொருட்டு அவனது நாட்டினைச் சிறப்பித்துக் கூறுகின்றாள். அவ்வகையான பாடல்களினால் மன்னனின் செல்வச் செழிப்புமிக்க வளத்தைக் காணமுடிகின்றது.
                அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
                வௌ்ளந்தீ பட்ட தெனவெரீஇப் - புள்ளினத்தங்
                கைச்சிறகாற் பார்ப்பொடுங்குங் கவ்வை யுடைத்தரோ
                நச்சிலைவேற் கோக்கோதை நாடு                                                                      (முத்தொள். 3)

என்னும் பாடலடிகளின் மூலம் சேறு நிறைந்த குளத்தில் செம்மைநிறமுடைய ஆம்பல் மலர்கள் மலர்ந்து இருக்கின்றன. இதனைப் பார்த்த பறவையினங்கள் குளத்தின்மீது தீப்பற்றியுள்ளன என நினைத்து ஆரவாரம் செய்து கொண்டு தங்களது குஞ்சுகளைப் பாதுகாத்துக் கொண்டு பறக்கின்றன. பறவைகளின் அத்தகைய ஆரவாரம் தவிரப் போர்நிகழ்வினால் ஏற்படும் ஆரவாரம் கேட்பதில்லை என்பதை உரைக்கின்றது. வௌ்ளத்தின் மீது தீ பற்றியது போல ஆம்பல் மலர்கள் இதழ்விரித்துச் செம்மைநிறத்துடன் காட்சியளிக்கின்றன என்பது சேரமன்னனது நாட்டின் வளத்தைச் சிறப்புற சுட்டுகின்றது. மேலும்
                நீரும் நிழலும்போல் நீண்ட அருளுடைய
                 ஊரிரே யென்னை யுயக்கொண்மின்                                                       (முத்தொள்.13:1-2)

என்றவாறு நீரும் நிழலும் எவ்வாறு தண்மை கொண்டு இன்பம் அளிப்பவையோ அதைப்போல இன்பம் அளிக்கும் மக்கள் வாழ்கின்ற சிறப்பான ஊரினைக் கொண்டவன் சேரமன்னன் என்பதை உரைக்கின்றது.
நலன்
                ஒருவரது தோற்றநலனைப் போற்றும் விதத்தில் அமைந்துள்ளது நலன் எனும் தன்மை. தலைவனின் தோற்றப்பொலிவினைக் கண்டு மனம் அதன்பாற்பட்டுக் களிப்புற்று இருப்பவளாகத் தலைவி இருப்பது இயல்பாகும்.
நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;
என்றும் என் தோள் பிரிபு அறியலரே''                                                          (நற்றிணை 1:1-2)

தலைவனின் நலனைச் சிறப்பித்துக் கூறுவதற்குச் சிறந்ததொரு சான்றாக இப்பாடல் வரிகள் உள்ளன. தலைவன் என்றும் மாறாத சொல்திறனைக் கொண்டவன்; என்றும் இனிமையானவன் என்று தலைவி உரைக்கின்றாள்.
அதனைப் போன்று முத்தொள்ளாயிரத்தில் காணும் தலைவி மன்னன் மீது காதல் கொள்கிறாள். அவனுடைய  அழகினைக் கண்டு வியந்து மனம் உருகுகிறாள்.
                வரைபொரு நீண்மார்பின் வட்கார் வணக்கும்
                 நிரைபொரு வேண்மாந்தைக் கோவே                                                   (முத்தொள். 11:1-2)

என்னும் பாடலின் வழியே தலைவன் சேரமன்னன் மீது காதல்கொண்ட தலைவி, அரசன் தோற்றத்தைக் கண்டு வியப்புறுகிறாள். காண்பவர்கள் மனதைக் கவரும் மலைபோன்று அகன்ற மார்பினை உடையவனென அவன்மீது காதலுறுகிறாள். மேலும் வீதி உலா வரும் சோழமன்னனைக் காணும் பெண்களின் கண்களை உவமைநயத்தோடு புலவர் உரைக்கிறார். இதனை
                நீர் வலையிற் கயல்போற் பிறழுமே
                 சாலேக வாயில்தொறுங் கண்                                                                        (முத்தொள். 49:3-4)
என்பதன் மூலம் அரசன் உலா வரும் காட்சியைச் சாளரத்தின் வழியே காணுகின்ற பெண்களின் கண்கள் வலையில் சிக்கிக்கொண்டு துள்ளிக்குதிக்கும் கெண்டைமீன்களைப் போல் இருந்தன எனத் தலைவி உரைக்கின்றாள். வலையில் சிக்கும் மீன்கள் அங்கும்இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நிலைப்போன்று பெண்களின் கண்கள் இருக்கின்றது என்பதை உவமையின் மூலம் அறியமுடிகின்றது.
காதல்
                அனைத்து உயிர்களிடத்தும் காணப்படும் ஒன்று காதல். “காதல் என்பது அந்நலனும்(அழகும்) வலியும் இல்வழியும் உண்டாக்கி உரைப்பது” (தொல். பொரு. ப.378) என்று காதலுக்கு விளக்கமாக இளம்பூரணர் உரை கூறுகிறார். தலைவியின் காதல் தலைவன் மீது அவள் கொண்ட அன்பு மிகுதியைச் சுட்டுகிறது. சங்க இலக்கிய அகத்துறைப் பாக்கள் தலைவன் தலைவி கொண்ட காதலின் மேன்மையை உரைக்கின்றன. இதற்குச் சான்றாக அமைவது,
                செம்புலப் பெயனீர் போல
                அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே                                                               (குறுந்.40:4-5)  

எனும் குறுந்தொகைப் பாட்டு. காதல் கொண்ட நெஞ்சத்தினைச், செம்மண்ணிலத்துப் பெய்த நீரானது அம்மண்ணோடு கலந்து அதன் நிறத்தையும் சுவையையும் பெற்று ஒன்றுபடுவது போல நம் நெஞ்சம் ஒன்றொடொன்று கலந்து தன்மைகள் ஒன்றுபட்டன”(ப.92) என்று உ.வே.சா. உரை எழுதுகிறார். இதனைப் போன்று முத்தொள்ளாயிரப் பாடல்களும் காதலின் பொருட்டு அமைந்துள்ளன. உலா செல்லுகின்ற தலைவனைக் காணுகின்ற தலைவி அவன் மீது காதல் கொள்கிறாள்.
                நாணொருபால் வாங்க நலனொருபா லுண்ணெகிழ்ப்பக்
                காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற - யாமத்
                 திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
                 திரிதரும் பேருமென் னெஞ்சு.                                                                                  (முத்தொள். 62:3-4)

என்னும் பாடலடிகளின் மூலம் சோழமன்னன் மீது கொண்ட காதலால் தலைவியின் நெஞ்சம் அவனைக் காணச் செல்கிறது; அங்கே இருக்காமல் மீண்டும் இவளிடம் வருகிறது; பின் மீண்டும் அவனிடம் செல்கிறது என்பதைதிரிதரும் பேரும் என்பதனால் அறியலாம். இதனைக் கொண்டு தலைவியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையைப் போன்று உள்ளது எனக் கூறுகிறாள். தலைவன் மீது கொண்ட காதல் நெஞ்சம் படும் வேதனையைப் படம் பிடிப்பதாக இவ்வுவமை அமைகிறது. காதலைப் பற்றி பாரதியார்
கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்ட வன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க                    (குயில் பாட்டு, காதலோ காதல் 1-4)

என கூறுகிறார். காதலின் தாக்கம் எத்தகையது என்பதை உரைப்பதற்கு இப்பாடல் சான்றாக அமையும். இருபது பேய்கள் உள்ளிருந்தால் எப்படி இருக்குமோ அத்தகைய நிலையில் காதல்வயப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பது திண்ணம். “பாலும் கசந்ததடீ, படுக்கை நொந்ததடீ“ எனக் கூறுவதும் இதன்பொருட்டேயாகும்.
வலி
                வலி என்பது வலிமையைக் குறிக்கின்றது. புறப்பாடல்களின் வழியே மன்னர்களது போர்த்திறம், கொடைச்சிறப்பு, படைவலிமை போன்றவற்றினைக் காணமுடிகின்றது. புறநானூற்றின் மூலம் இத்தகைய கூறுகளின் தன்மையைச் சிறப்புற அறியமுடியும்.
                மறலியன்ன களிற்றுமிசை யோனே
                களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போலவும்
                பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
                சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப                                                             (புறம்.13:4-7)

என்னும் புறநானூற்றுப் பாடலின் மூலம் எமனை ஒத்த யானையைக் கொண்டவன் தலைவன். அந்த யானை கடலைக் கிழித்து செல்லும் கப்பலைப் போன்று காட்சியளிக்கிறது. இத்தகைய  சிறப்புகளைப் கொண்ட யானைபடையைக் கொண்டவன் தலைவன் சோழன் என்பதை உரைக்கின்றது. இதனைப் போன்று முத்தொள்ளாயிரப் பாடலில் தலைவன் படைவலிமையைப் போற்றும் தலைவியின் கூற்றிலுள்ள சிறப்பான உவமையால் அறியலாம்.      
கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே
                 நல்யானைக் கோக்கிள்ளி நாடு                                                               (முத்தொள்.27:3-4)

மதம் கொண்ட யானைகளைப் படையாகக் கொண்டவன் தலைவன்.  பலரையும் கொல்லும் தன்மை கொண்ட மன்னன் அதன் மீதேறி பகைவரை அழைத்தல் எமன் அழைப்பது போன்று உள்ளது. போர்க்களத்தில் மதிலை உடைத்து எறிந்ததால் யானையின் தந்தம் உடைந்தது. மன்னர்களின் மணிமுடினை உதைத்து உதைத்து அதன் கால் நகங்கள் தேய்ந்தன (பா.34) என்று மன்னனின் படைவலிமையைச் சுட்டுகிறது இப்பாடல்.
முடிவுகள்
Ø             தொல்காப்பியம் சுட்டும் நிலைக்களன்களானச் சிறப்பு, நலன், காதல், வலிமை, இழிந்ததன்
                 பொருட்டு என்னும் ஐந்து  நிலையில் உவமை அமையும். சிறப்பு, நலன், காதல், வலிமை
       போன்ற கூறுகளை உரைக்கும் நிலையில் முத்தொள்ளாயிர உவமைகள்
       கையாளப்பட்டுள்ளன. மன்னர்களைப் போற்றும் விதத்தில் பாடல்கள் உள்ளமையால்
       இழிந்ததன்பொருட்டு உவமை காணப்படவில்லை.
Ø             மன்னர்களைப் போற்றும் விதமாகவும் உயர்வாகக் காட்டவும் இயற்கை நிகழ்வுகள்
        உவமையாக்கப்பட்டுள்ளன.
Ø             யானையின் வலிமையைக் கொண்டு மன்னனது படைவலிமையைப் புலப்படுத்துகிறது.

Ø             தலைவியின்  காதல் ஒருதலைக் காதலான கைக்கிளையாக இருப்பது தெளிவாகின்றது.

No comments:

Post a Comment